×

கொரோனா நிதி தராததால் ஆத்திரம் ஏற்றுமதி நிறுவனத்தில் குப்பையை கொட்டிய மாநகராட்சி அதிகாரி

புழல்: கொரோனா நிதி தராததால் ஏற்றுமதி நிறுவனத்திற்குள் மாநகராட்சி அதிகாரி குப்பை கழிவுகளை கொட்டிய சம்பவம் மாதவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதவரம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த துரைராஜ் (46), அதே பகுதியில் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இந்த நிறுவனத்திற்கு வந்த 23வது வார்டு மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர், ‘‘கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் தர வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அதற்கு துரைராஜ், ‘‘ஊரடங்கால் பல மாதங்களாக நிறுவனம் மூடப்பட்டு, தளர்வுக்கு பிறகு தற்போதுதான் திறந்து செயல்படுகிறது. கொரோனாவால் தொழிலும் மந்தமாகவே நடைபெறுகிறது. அதனால், அவ்வளவு பணம் தர முடியாது,’’ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு ஆய்வாளர், ‘‘பணம் தராவிட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்,’’ என எச்சரித்து சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை துரைராஜ் தனது நிறுவனத்தை திறக்க வந்தபோது, நுழைவாயில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு, நிறுவனத்தின் உள்ளே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பணிக்கு வந்த ஊழியர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து துரைராஜ் புழல் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உடனடியாக சுகாதாரத் துறையினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனால், நேற்று மாலை வரை குப்பை கழிவுகளை அகற்ற யாரும் வரவில்லை. இதனால், நிறுவன ஊழியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதுகுறித்து, மேலதிகாரிகளிடம் புகார் செய்ய உள்ளதாக நிறுவன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Tags : corporation official ,Corona ,export company , Corona is the corporation official who dumped trash on the export company in anger for not paying
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...